மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், கொளுத்தும் வெயிலை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்துள்ள பேட்டி குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஜூன் 2ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், கோடை வெயில் கொளுத்து வருவதால், விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ”திருச்சி மாவட்டத்தில் தற்போதே வெயில் 104 டிகிரியைத் தாண்டி விட்டது. இப்போதைக்கு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதல்வர் அலுவலகம் சொல்வதைப் பொறுத்து, முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.