நடப்பாண்டில் வரும் ஜூலை 24-ம் தேதி தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. அதனடிப்படையில் நடைபெறவுள்ள தேர்தலில் சட்டப்பேரவையில் தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியில் இருந்து 4 பேரும், அதிமுக கூட்டணியில் இருந்து ஒருவரும் உறுதியாக தேர்வு செய்யப்பட முடியும். ஆனால் 6-வது உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக் காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 பேரின் பதவிக் காலம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் எம்.பி.க்களாக உள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக் காலமும், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக் காலமும் நிறைவடைகிறது.
இந்தநிலையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திமுகவை பொறுத்தவரை மாநிலங்களவையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வலுவான வாதங்களை முன் வைத்து வரும் வில்சனுக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளரான எம்.எம்.அப்துல்லாவுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுசவுக்கு ஒரு ராஜ்ஜியசபா உறுப்பினர் பதவி வழங்குவது அக்கட்சியில் வழக்கமாக உள்ளது. தொமுசவை சேர்ந்த சண்முகம் அல்லது நடராஜன் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவருக்கு ராஜ்ஜியசபா எம்பி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. அக்கட்சிக்கு ஒரு ராஜ்ஜியசபா எம்பி இடம் வழங்கப்படும் என ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு எம்பி பதவியை தர திமுக முன் வந்து உள்ளது.
அதிமுகவில் ஒரேயொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் எம்பி ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு எம்பி பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுகவை பொறுத்தவரையில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு திருச்சி மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. துரை வைகோ போட்டியிட்டு எம்பி ஆனார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து ஒப்பந்தம் போடவில்லை. அது குறித்து கேட்கவும் இல்லை’ என தெரிவித்தார்.
Readmore: ஐபிஎல் 2025!. RCB அணிக்கு புதிய கேப்டனாக ராஜத் படிதர் நியமனம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!