நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த ஏ.வாழவந்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவருக்கு வயது 50 ஆகிறது. இவரது மனைவி பூங்கொடி (47). இவர்களது மகன் சுரேந்தர் (25). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில நாட்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபித்துக் கொண்ட மனைவி சினேகா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு சுரேந்தர் ஃபோன் செய்து வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அதற்கு பிடிவாதமாக வரமாட்டேன் என சினேகா மறுத்துள்ளார். இந்நிலையில் தான், நேற்று காலை நீண்ட நேரமாகியும் செல்வராஜின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது தந்தை செல்வராஜ், தாய் பூங்கொடி, மகன் சுரேந்தர் ஆகிய மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, உடனே எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு விரைந்து வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், சினேகா தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரே மகன் என்பதால் பெற்றோர் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால், கணவனுடன் கோபித்துக் கொண்டு அவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதால், மனமுடைந்த சுரேந்தர் மற்றும் அவரது பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More : சங்ககிரி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி வெட்டிப் படுகொலை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!!