சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி பட்டக்காரனூர் கால்வாயில் நேற்று (ஆகஸ்ட் 9) அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த பெண், வெள்ளரி வெள்ளி கிராமம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மனைவி கலாவதி (வயது 28) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நேற்று துணிதுவைக்க சென்றவர், திடீரென மயக்கமடைந்து கால்வாய் நீரில் தவறி விழுந்துள்ளார். மேலும், அவருக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குடும்பத்தினரிடம் கலாவதியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.