செல்போனில் அடிக்கடி பேசி வந்த தாயை இரண்டு மகன்களும் சேர்ந்து அடித்துக் கொண்ட சம்பவம் வாழப்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பொன்னுவேல். இவரது மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு கவின் (21) உள்பட இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வசந்தி அடிக்கடி செல்போனில் யாரிடமோ மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து கணவன் பொன்னுவேல் மற்றும் அவரது மகன்கள் நேற்றிரவு வசந்தியிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், தாய் வசந்தியை கணவன் மற்றும் இரண்டு மகன்களும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, படுகாயமடைந்த வசந்தி மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் வசந்தியை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பொன்னுவேல் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.