தமிழ்நாட்டில் உள்ள கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஜனவரி 30-ம் தேதி வெளியானது.
குரூப் 4 தேர்வை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே இத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதன்படியே சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர்.
முதலில் 6,244 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக 3 முறை காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டது. எனவே, மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு அக்டோபர் 28-ம் தேதி முடிவுகள் வெளியானது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் நவம்பர் 7-ம் தேதி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் வழியாக தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 09.11.2024 முதல் 21.11.2024 வரை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற்றது.
இந்நிலையில், தேர்வாணையம் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு 2024 அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
Readmore: நாமக்கல்லில் அதிர்ச்சி!. கணவன் – மனைவி விஷமருந்தி தற்கொலை!. கடன் தொல்லையால் விபரீத முடிவு!