தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் அக்டோபர் 27-ல் நடைபெறும், அதில் கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களாகவே மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், நேற்று மாலை மூன்று மணியளவில், பெரும் தொண்டர்கள் கூட்டத்துக்கு மத்தியில் மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மேடையில் பறையிசையுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஏன் கொள்கை தலைவர்களாக ஏற்றோம்? பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை ஏன் கொள்கை தலைவர்களாக ஏற்றோம் என்பது குறித்து விஜய் பேசியதாவது, “பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, `ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஆனாலும், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூகநீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம். பெரியாருக்கு அப்புறம் எங்களின் கொள்கைத் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் இந்த மண்ணில் மதசார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாகத்துக்கும், செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம்.

கொள்கை தலைவர்கள் ஏன்? இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தியாவில் இந்தப் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறவர்கள் எல்லோரும் நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தவும், சாதியை ஒடுக்குமுறையைக்கு எதிராகவும் போராடிய அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். பெண்களைக் கொள்கை தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம்தான். அதில், ஒருவர் ஆகப்பெரும் வீராங்கனை இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலுநாச்சியார். சொந்த வாழ்க்கையின் சோகத்தை கூட மறந்துவிட்டு இந்த மண்ணுக்காக வாளேந்தியும், வேலேந்தியும் போர்க்களம் புகுந்த ஆணைக் காட்டிலும் வீரமான வேகமான புரட்சியாளர்தான் நம் வேலுநாச்சியார்.

இன்னொருவர் முன்னேறத் துடிக்கின்ற சமூகத்தில் பிறந்து, இந்த மண்ணில் பின்தங்கி விடக்கூடாது என்று அதன் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள். சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திர போராட்ட களத்தில் இறங்கி போராடிய புரட்சி பெண்மணிதான் நம் அஞ்சலையம்மாள். இவர்கள்தான் நம் கொள்கை தலைவர்கள். இவர்களை நாம் பின்பற்றுவதே நம் மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணத்துக்குமான மிகப்பெரிய சான்றாக இருக்கும்” என்று விளக்கமளித்தார்.

Readmore: தமிழ்நாட்டில் மட்டும்தான் 4 முதலமைச்சர்கள்!. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறார்கள்!. எடப்பாடி பழனிசாமி விளாசல்!