சேலத்தில் தங்க நகைகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் நகைக்கடை ஒன்று நடத்திவருகிறார். இந்தநிலையில், தங்க நகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானவர்களிடம் பெருமளவில் பணம் வசூல் செய்துள்ளார். மேலும், மாதாந்திர தங்க சீட்டு திட்டங்களையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக கடை திறக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, சபரிசங்கரின் வீட்டிற்கு சென்றபோது வீடும் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த மக்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக 18 பேர் புகார் அளித்துள்ள நிலையில், நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர்களான கவின் மற்றும் அஜித் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 406, 409, 420, 120 (பி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Readmore: தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவு!. மேட்டூர் உபரிநீர் கால்வாயில் கலந்து நுரைப்பொங்கும் அவலம்!.