காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில், ஆண் நபரின் சடலம் ஒன்று காவிரி ஆற்றில் மிதந்து வந்ததுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செம்பனார்கோவில் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் ஆற்றில் மூழ்கி இறந்தது மருதூர் லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 62) எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இறுதி சடங்குகள் செய்து, செல்வராஜின் உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். அப்போது, இறந்ததாகக் கருதப்பட்ட செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதைக் கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, “உன்னை போன மாதம் தானே தகனம் செய்தோம்.. எப்படி உயிரோடு வந்தாய்?” என செல்வராஜிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், இத்தனை நாட்களாக திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், இப்போது தான் ஊருக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் தான், செல்வராஜ் என்று நினைத்து, அடையாளம் தெரியாத உடலை தகனம் செய்தது கிராம மக்களுக்கு புரிய வந்தது. பின்னர், தனது குடும்பத்தினரை சந்தித்த செல்வராஜ் “16ஆம் நாள் காரியம் செய்து படையல் படைத்து விட்டீர்களா?. சரக்கு வைத்து படைத்திருப்பீர்களே, எங்கே சரக்கு” என்று சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார். இந்நிலையில், செல்வராஜ் உயிருடன் இருப்பதால், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனால், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.