சேலம் மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பிரதேசமாக அமைந்துள்ளது ஏற்காடு. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் உள்ள குளிர் பிரதேசங்களில் ஒன்றாகும். ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சீட் காட்சி முனை, ஜென்ஸ் சீட் காட்சி முனை, சேர்வராயன் மலை, மஞ்சகுட்டை காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் இடமாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி ஏற்காட்டில் கோடை காலத்திலும் வெப்பநிலை குறைவாக உள்ளதால் சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்.

சேலம் மாநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா. இங்கு மான், வெள்ளை மயில், மயில், நாரை கொக்கு, மலைப் பாம்புகள், முதலைகள், நரி, வெளிநாட்டுக் குரங்கு வகைகள், ஆமை, பறவைகள் என பல உயிரினங்கள் உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் வன உயிரியல் பூங்கா குளிர்ந்த நிலையில் இருக்கும். இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக சேலம் மக்கள் அதிக அளவில் வார இறுதி நாட்களில் வன உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருமையான சுற்றுலா தளம் ஆகும்.

இந்நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சராக சேலம் ராஜேந்திரன் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ஏற்காட்டில் ஆய்வு மேற்கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உள்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் சுற்றுலாத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில், ஏற்காடு பக்கோடா காட்சிமுனைப் பகுதியில் ரூ. 1.42 கோடி மதிப்பீட்டில் நுழைவு வளைவு, சிறு வணிகக் கடைகள், சுகாதார வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதை, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

கிளியூா் அருவியில் ரூ. 78.61 லட்சம் மதிப்பீட்டில் வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள், சுகாதார வளாகங்கள், பாதுகாப்பு அறை உள்ளிட்ட பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோன்று, சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், ரூ. 2.54 கோடி மதிப்பீட்டில் அண்ணா பூங்கா அருகில் உள்ள ரவுண்டானா ஒண்டிக்கடை சந்திப்பு சாலை பகுதியில் நடைபாதைகளை அழகுபடுத்துதல், தெருவிளக்குகள், வழிகாட்டி பதாகைகள், பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

லேடீஸ் காட்சிமுனையில் ரூ. 1.13 கோடி மதிப்பீட்டில் நுழைவு வளைவு, சிறு வணிகக் கடைகள், சுகாதார வளாகங்கள், உணவகம், குடிநீா் வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஏரிக்கரையை மேம்படுத்தும் வகையில், ரூ. 1.94 கோடி மதிப்பீட்டில் படகு இல்லத்தில் இருந்து சுற்றுச்சூழல் பூங்கா வரை இணைப்புப் பாலம் அமைத்தல், படகு இல்லம் அருகில் நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோன்று படகு இல்லத்தில் மிதவை உணவகம் உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது என்றார்.

Readmore: தலைக்கேறிய மதுபோதை!. ரோட்டில் கிடந்த +1 மாணவி!. சேலத்தில் பகீர் சம்பவம்!