கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.