நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில் புயலாக வலுபெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் என்றும் சென்னையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (நவ 21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயரிடப்படும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புயல் உருவாகும்பட்சத்தில் சென்னையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.