பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா, சிட்டா மாறுதல் உள்ளிட்ட நிலம் சம்பந்தமான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசின் தமிழ் நிலம் புவிசார் தகவல் (TamilNilam Geo-Info) செயலியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சென்னை எழிலகத்தில் கடந்த 9ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நேரம் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து பணியின் போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 24 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு புதிய செயலி உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் நிலம் புவிசார் தகவல் (TamilNilam Geo-Info) என்னும் கைபேசி செயலியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது நில விபரங்கள், பட்டா, சிட்டா, நிலப்பரப்பு, அ-பதிவேடு, அரசின் புறம்போக்கு நிலங்கள், புலப்படம், நகர நில அளவை வரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிடவும், மேலும் புதிய பட்டா போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம்.