கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 40,000 ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. ஆண்டிற்கு இரண்டு மண்டலங்கள் என இந்த அணையிலிருந்து பாசன வசதி பெறும் நிலங்கள் சரிபாதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல்போக பாசனமாக 1,03,500 ஏக்கர் நிலங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை நன்செய் பயிர்களுக்கும் , இரண்டாம் போக பாசனமாக மீதமுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்களுக்கு டிசம்பர் 15 முதல் மார்ச் 15 வரை புன்செய் பயிர்களுக்கும் இந்த அணையிலிருந்து நீர் வழங்கப்படுகிறது. பவானிசாகர் அணையின் நீர் இருப்பை பொறுத்து வருடத்தில் 9 மாதங்கள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த மண்டலங்கள் மூலம் நேரடியாக தண்ணீர் பெறாத 40,000 ஏக்கர் நிலங்களுக்கு மறைமுகமாக கசிவு நீர் முறை மூலமாகவும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலமாகவும் கீழ்பவானி வாய்க்கால் பயன் தருகிறது. அதன்படி, கீழ்பவானி பிரதான கால்வாயில் பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு கால்வாயில் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கால்வாயில் திடீரென தண்ணீா் குறைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்கள் கா.செந்தில்குமாா், மூ.தினேஷ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை களப்பணியாளா்களுடன் சென்று கால்வாயில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது கோபி வட்டத்துக்கு உள்பட்ட வெள்ளாங்கோவில் கிராமம் அருகில் மழை நீா் வடிகால் குகை வழிப் பாதையில் சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகள், கால்வாயில் உள்ள தண்ணீரை பிவிசி குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்துச்செல்வது கண்டறியப்பட்டு அந்தக் குழாய்கள் முழுவதும் அகற்றப்பட்டன. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.