தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், குடியரசு தினம் (ஜன. 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக். 2), உள்ளாட்சிகள் தினம் (நவ. 1) ஆகிய தினங்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்களவைத் தோ்தல் காரணமாக மே 1ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், “ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை தேர்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் கிராம சபை கூட்டத்தில் ஆலோசனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : சேலத்தில் அரசு பொருட்காட்சி நாளை (ஆகஸ்ட் 9) தொடக்கம்..!!