கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அன்று முதல் தற்போது வரை விஜய் தான் தமிழக அரசியலில் பேசு பொருளாக இருக்கிறார். ஆதரவாகவோ எதிராகவோ கண்டிப்பாக விஜய் பற்றியே ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் பிற கட்சிகளும் பேசி வருகின்றன.

விஜய் மாநாட்டில் மாஸ் காட்டிய நிலையில் நிச்சயம் வரும் தேர்தலில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். தனித்துப் போட்டியா? கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் தற்போதைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.

இப்படியாக நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி அமைப்பு மாவட்டங்கள், 28 சார்பு அணிகளுக்கு என தலைவர்ம் செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பதவிகள் வழங்கப்பட இருக்கும் நிலையில் நிச்சயம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மேல் பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தற்போது பல வியூகங்களை விஜய் வகுத்து வருவதாகவும், இதற்காக தனி டீம் ஒன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் கட்சி முத்திரை பதிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறதாம். டிசம்பர் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு இருக்கும் என்றும் ஏற்கனவே நேர்காணல் நடத்தி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது விரைவில் அந்த பட்டியல் வெளியாகும் என்றும் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Readmore: குட்நியூஸ்!. பொங்கலுக்கு ரூ. 2000!. இல்லத்தரசிகளுக்கு டபுள் ஜாக்பாட்!. தமிழக அரசு மாஸ் பிளான்!