விபத்தில் தந்தை இறந்ததை மறைத்து, அவரது கனவை நிறைவேற்ற உறவினர்கள் சேர்ந்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரேயைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் திக்ஷிதா(20). இந்தநிலையில், கடந்த 20ம் தேதி காலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய நாள் மாலை திருமண வரவேற்பு விருந்து நடைபெற்றது. இந்தநிலையில், திருமண பதிவுக்கு தேவையான ஆவணங்கள் தயார் செய்வதற்காக, சந்துரு, நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ஹுலிதிம்மாபுராவுக்கு சென்றுள்ளார். அப்பணியை முடித்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில், சந்துருவும், நண்பரும் படுகாயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி, சந்துரு இறந்து விட்டார். இத்தகவல், சந்துருவின் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இறப்பதற்கு முன்னதாக, உறவினர்களிடம், தான் விபத்துக்குள்ளான செய்தியை, மகளுக்கு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக தகவல் தெரிந்த உறவினர்கள், மகளிடம் மறைத்தனர். திருமண வரவேற்பில் சந்துரு இல்லாததால் அவரது மனைவியும், தந்தையை காணாது மகளும் தவித்தனர்.
‘திருமணத்துக்காக அங்கும் இங்கும் அலைந்ததால், சற்று தளர்வடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்’ என சமாளித்தனர். 20ம் தேதி காலை முகூர்த்தம் வரை இதையே கூறி சமாளித்தனர். தாலி கட்டி முடித்த பின், சந்துரு மரண செய்தியை தெரிவித்தனர். இதை கேட்ட அனைவரும் கதறி அழுதனர். திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. திருமண கோலத்தில் மருத்துவமனைக்கு சென்ற திக்ஷிதா, தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.