தமிழ்நாட்டில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகள் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா-கோவா கடற்கரையில் நீடிக்கிறது. மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று (அக்.12) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 14-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 15 மற்றும் 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்கும்படி, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி , சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும‘ மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்.