சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரை பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ரூ.3.63 கோடி அளவிற்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விவசாய கடன் வழங்கியது, கூடுதலாக கடன் வழங்கப்படும் பயிர்களுக்கு முறைகேடாக கடன் வழங்கியது, நகைக்கடன் பெற்றுள்ளவர்களுக்கு பணத்தை தராமல் முறைகேடு செய்தது, சங்கத்தில் டெபாசிட் செய்த தொகையை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துள்ளது என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
இதையடுத்து, கூட்டுறவு சங்க செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கூட்டுறவு இணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். பின்னர், வெள்ளரி வெள்ளி கூட்டுறவு சங்க செயலாட்சியர் கவிதா விசாரணை நடத்திய நிலையில், மணி, ரவிக்குமார் ஆகியோர் ரூ.1.08 கோடி பணத்தை சுருட்டியது உறுதியானது.
இதையடுத்து, மோகன், மணி, ரவிக்குமார் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கையாடலில் ஈடுபட்ட பணியாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் ரூ.2 கோடியை கூட்டுறவு சங்கத்தில் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடலாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது