சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் முதல் அடிப்படை வசதிகள் வரை அனைத்திலும் உள்ள குறைகளை கலையவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து நலம்பெற்று மகிழ்வுடன் திரும்புகின்றர். தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நம்பி வருபவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவத்துடன் பொது அறுவைச் சிகிச்சை, மகப்பேறு, இருதயம், நரம்பியல், புற்றுநோய் உள்ளிட்ட 37 துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவற்றுடன் கொடுமையான நோயாக மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும் நம்பிக்கை அளித்து நோய் தீர்க்கும் மையமாகவும் சேலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் 80க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வரும் சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் அதிகளவு குறைகள் இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குழந்தை கடத்த சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அவசியமாக இருக்கிறது. ஆனால், அரசு மருத்துவமனையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருப்பதாகவும் இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல், மருத்துவமனையில் தீயணைப்பு கருவிகள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் யாரேனும் வந்தால் மட்டுமே தற்காலிகமாக சிலவற்றை சரி செய்கின்றனர். அது சில நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது என்று தெரிவித்தனர். மேலும், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். போதிய பாதுகாப்பு இல்லாததால் வாகனங்கள் திருட்டு அதிகளவில் நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள லிப்டுகளில் 8க்கும் மேற்கட்ட லிப்ட்கள் வேலை செய்யாமல் பழுதாகி உள்ளதாகவும், போதுமான பராமரிப்பு இல்லாததன் காரணமாக அடிக்கடி லிப்ட்களில் நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவர் உள்பட பலரும் சிக்கிக்கொள்கின்றனர் என்றும் இதனால் அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: எகிறும் விலை!. திருச்செங்கோட்டில் ரூ.120 வரை விற்பனையான கொப்பரை தேங்காய்!. விவசாயிகள் மகிழ்ச்சி!