சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே ஏரியில் மூழ்கி 2 சிறார் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். தொழிலாளி. இவரது மகள் சிவனந்தினி (18), முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார். மகன் சிவஸ்ரீ (10), 4-ம் வகுப்பு மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகள் திவ்யதர்ஷினி (15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிவனந்தினி, சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் நேற்று அப்பகுதியில் உள்ள கொத்திக்குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.அப்போது, திடீரென சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கினர். இதைக் கண்ட சிவனந்தினி, இருவரையும் காப்பாற்றுவற்காக ஏரியில் இறங்கியபோது, அவரும் நீரில் மூழ்கினார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் நீரில் இறங்கி 3 பேரையும் தேடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு மூவரையும் மீட்டு, நங்கவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த நங்கவள்ளி போலீஸார் 3 பேரின் உடல்களையும், பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Readmore: ரயிலில் பட்டாசு எடுத்துச்செல்ல தடை!. மீறினால் 3 ஆண்டுகள் சிறை!. அபராதம்!. புகார் எண்கள் அறிவிப்பு!