கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி. முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கினர். இந்நிலையில், முகாமில் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில், என்.சி.சி. பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான சிவராமன் (வயது 30) என்பவர், அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தனது நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி முதல்வர் சதீஷ்குமாரிடம் மாணவி தெரிவித்தபோது, இதை பெரிதுபடுத்தவோ, வீட்டில் யாரிடமோ சொல்லக் கூடாது என்று கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இரவு மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது தயார் மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார் சிறுமி. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், இதுகுறித்து போலீசில் புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, என்சிசி முகாமில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஊடகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளி மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர அறிவுறுத்தியுள்ளது. மேலும், காவல்துறை, தமிழ்நாடு அரசு 3 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More : TNEB | ரூ.5,000 மேல் கரண்ட் பில் கட்டுபவரா நீங்கள்..? மின்சார வாரியம் புது உத்தரவு..!!