அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை (அக்டோபர் 16) 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன்காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நாளையும் (அக்.16) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த 4 மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.