காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் ஆற்றில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையில் பக்தர்கள் கூடுதுறையில் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றுக்கு செல்லும் படித்துறைகள், பரிகார மண்டபங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் திதி, தர்ப்பணம், பரிகார பூஜைகள் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. காவிரியில் மின் மோட்டார்களை அமைத்து புனித நீராட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மேட்டூா் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள காவிரி கரையோரப் பகுதிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.