சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளியை கட் அடித்து விட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவனை தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர். திண்டமங்கலம் ரயில்வே பாலத்திற்கு அருகே அழுது கொண்டிருந்த சிறுவனை அந்த வழியாக சென்ற விவசாயியை ஒருவர் மீட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, தன்னை 3 பேர் கடத்திக் கொண்டு பாலத்தில் விட்டு சென்றதாக தெரிவித்தார்.
இதனால், பதறிப்போன போலீசார், சிறுவனின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்ததில், சிறுவன் துளசம்பட்டி அருகே மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் – தமிழரசி தம்பதியின் மகன் திவனேஷ் என்பது தெரியவந்தது. பின்னர், சிறுவனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் திவனேஷை, அரையாண்டு விடுமுறை முடிந்ததும் அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாமல் மனம்போன போக்கில் சுற்றியதுடன் இதனை மறைக்க கடத்தல் நாடகம் ஆடியது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, சிறுவனின் தாயாரை காவல்நிலையத்திற்கு வரழைத்து அறிவுரை கூறி சிறுவனை போலீசார் அனுப்பி வைத்தனர்.