40 மாத ஆட்சியில் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள திமுக அரசு என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்துவிட்டனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய வான் சாகச நிகழ்ச்சியை காண வருமாறு மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதன்படி, லட்சக்கணக்கான மக்கள் கூடினர். ஆனால் அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால் லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் கூடினர். மக்கள் கூட்டம் அலைகடலென திறண்டதால், நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. இது வெட்கக்கேடான விஷயம்.” என்றார்.

மேலும், ”திமுக அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார். முதலமைச்சர், அமைச்சர்கள் மட்டும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர். அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் அழைப்பு விடுத்தார். இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த பிரச்சனைக்கு தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ” அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாட்டு மக்களை கடனாளியாக ஆக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறினார். இப்போது திமுகவின் 40 மாத ஆட்சியில் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக கூறினார்கள். இப்போது இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது ஏமாற்று வேலை. வெளிநாடு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றதாகவும் மக்கள் பேசிக் கொள்கின்றனர். 19 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரே வாரத்தில் போட்டிருக்கலாம்” என்றார்.

Readmore: மகுடஞ்சாவடியில் பைக் மீது பேருந்து மோதி விபத்து!. தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்!.