வடிவேலு மிளகாய் பொடி காமெடியை போல், எடப்பாடியில் கொள்ளையில் ஈடுபட்ட திருடனை பெயிண்ட் டப்பாவை வைத்து போலீசார் தட்டித் தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குண்டுமலைகாடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயியான இவர், கடந்த அக்டோபர் 13-ந் தேதி தோட்ட வேலைக்காக தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட முருகன் என்ற கொள்ளையன், பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
மாலை வீட்டிற்கு சென்ற பழனியப்பன் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூலாம்பட்டி போலீசார், வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். அப்போது, கீசெயின் ஒன்று கிடைத்ததை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் பெயிண்டு டப்பா ஒன்றையும் கண்டெடுத்தனர்.
இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர், அந்த பெயிண்ட்டில் மிதித்துள்ளார். பெயிண்ட் பட்ட காலுடன் அந்த நபர் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டுக்கு சென்றுள்ளார் என்பதை போலீசார் ஊகித்தனர். இதற்கிடையே, மழை காலம் என்பதால் அந்த கால் தடம் சிமெண்டு சாலையில் சுவடுகளாக பதிவாகி இருந்தது. அதை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அதே தெருவில் முருகன் (21) என்பவரது வீடு வரை கால்தடம் இருந்ததை கண்டனர். கீசெயினில் இருந்த சாவியை கொண்டு முருகன் வீட்டை திறந்தனர்.
பூட்டு திறந்து கொண்டது. உடனே கொள்ளையில் ஈடுபட்டது முருகன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட முருகனை, கைது செய்து அவரிடம் இருந்து 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை மீட்டனர். வடிவேலுவின் மிளகாய் தூள் காமெடி போல் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்,