தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமுதம் பல்பொருள் விற்பனை அங்காடி மூலம் ரேஷன் கடைகளில் ரூ.499 விலையில் 15 மளிகை பொருட்கள் கிடைக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அமுதம் அங்காடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்கில், நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மூலம் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. சுய சேவை சேவைமுறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.

அமுதம் மக்கள் அங்காடிகள் மற்றும் அமுதம் ரேஷன் கடைகளுக்கு அமுதம் பிளஸ் என்ற பெயரில் ஒரு மாத மளிகை பொருட்கள் 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூபாய் 499 -க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதனை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். மளிகை பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தபின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “தமிழ்நாடு நுகர்வோர் வாணிகம் மூலமாக இந்த 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி உள்ளிட்ட 10 அமுதம் நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை நடக்கும். தீபாவளிக்கு தங்கு தடை இன்றி நியாய விலை கடைகளில் பொருட்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன. பொருட்கள் இல்லை என்ற நிலை எங்கும் இல்லை என்று கூறினார்.

Readmore: கூட்டணிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும்!. 2026தான் பைனல் மேட்ச்!. அதிமுகதான் சாம்பியன்!. இபிஎஸ் அதிரடி!