நோயாளிகள் நோயை குணப்படுத்த மருத்துவமனையை நாடும் நிலையில், மருத்துவமனை வளாகத்திலேயே நிலவும் சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள் நோயாளிகளின் உறவினர்கள். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சுமார் 3,000 க்கும் அதிகமான உள்நோயாளிகளும், ஆயிரத்திற்கும் அதிகமான வெளி நோயாளிகளும் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், துணிகள் உள்ளிட்ட குப்பைகள் தினந்தோறும் குவிக்கின்றன.

இந்த குப்பைகளை பாதுகாப்பாக அழிப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நவீன இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மக்கும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூளாக்கி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த இயந்திரம் ஓராண்டுக்கு பழுது காரணமாக செயல்படாமல் இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் 5 டன் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளன. மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தேங்கி இருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

இல்லையென்றால் நோயை குடப்படுத்த பயன்படும் மருத்துவமனை நோய் தொற்றை பரப்பும் மருத்துவமனையாக மாறும் அபாயம் ஏற்ப்படும் எனவும் மருத்துவமனை வளாகம் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளில் உள்ளே இருக்கும் வார்டுகளும் சுத்தமில்லாமலும் முறையான பராமரிப்பு இல்லாமலும் இருப்பதாக அங்கு வரும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜிநாதனிடம் கேட்டபோது கழிவுகளை சேகரித்து அழிக்கும் இயந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் பழுது சரி செய்யப்பட்டு இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

Read More : ஆம்ஸ்ட்ராங் வழக்கு..!! மனைவியை தொடர்ந்து இயக்குநர் நெல்சனிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!