எடப்பாடி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் புதுமண தம்பதி கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜவேல்(25) என்பவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பெண், தங்கை உறவுமுறை என்பதால் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. அப்பெண்ணிற்கு வீட்டில் மாப்பிளை பார்க்க ஆரம்பித்ததால், ஒரு கட்டத்தில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதையடுத்து, ராஜவேலுவின் வீட்டிற்கு பெண்ணின் உறவினர்கள் சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ஆத்திரமடைந்து கதவை உடைத்து காதல் தம்பதியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜவேலுவின் தயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, புதுமண காதல் தம்பதியை கடத்தியது, பெண்ணின் உறவினர்களான ஜம்புலிங்கம் (52), மகேஸ்வரி (34), ரவி (50), அவருடைய மனைவி புவனேஸ்வரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் மீட்ட போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
Readmore: பிஎம் கிசான்!. கணவன்-மனைவி இருவருக்கும் நிதியுதவியா?. 18வது தவணையில் முக்கிய முடிவா?. விதிகள் இதோ!