சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சித்தப்பாவை பார்க்க சென்ற பெண்ணை, மதுபோதையில் இருந்த அண்ணன் சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி.இவரது அண்ணன் கார்த்திக். இந்தநிலையில் ஜெயந்தி கலப்பு திருமணம் செய்த கோபத்தில் கடந்த 17 ஆண்டுகளாக கார்த்திக் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது சித்தப்பாவை சந்திக்க ஜெயந்தி தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் அங்குவந்த கார்த்திக், ஜெயந்தியை கண்டதும் சரமாரியாக அடித்து, வெளியில் இழுத்து ஆடைகள் கிழியும் அளவிற்கு தாக்கியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கார்த்திக்கிடம் இருந்து ஜெயந்தியை ஒருவழியாக மீட்டனர்.
இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான ஜெயந்தி, “நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஆடையெல்லாம் கிழித்து அசிங்கப்படுத்தி, கொலை வெறியுடன் தாக்கிய நபர் மீது நடவடிக்கை வேண்டும்” என்று போலீஸாரிடம் கூறியுள்ளார் அதற்கு புகாரெல்லாம் வாங்க முடியாது என்று போலீஸார் சொன்னதாக ஜெயந்தி தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஏனென்றால், அண்ணன் – தங்கைக்குள் தகராறு, இதில் நாங்க என்ன செய்யமுடியும். அதான் அந்த பையனை கண்டித்து அனுப்பினோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.