திருநள்ளாறு சனீஸ்வரர் பெயரில் போலி வெப்சைட் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. நவக்கிரக கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில், 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். பிறகு வந்த விஜயநகர பேரரசர்கள், இக்கோயிலை விரிவுபடுத்தினார்கள். சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.

சம்பந்தர், சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல சுவாமி பற்றி பாடி உள்ளனர். இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர, அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.

பொதுவாக ஒருவருடைய வாழ்நாளில், வாழ்நாள் என்பது 120 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு 30 வருடத்திற்கும் சனீஸ்வர பகவானுடைய ஏழரை சனியின் காலம் ஒருவருடைய மானிட வாழ்வை மாற்றுகிறது. இவைகள் மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி இவ்வாறாக நான்கு சுற்றுகளை உடையதாக, நான்கு முப்பது ஆண்டுகளாக சொல்லப்பட்டு உள்ளது. மேலும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி உள்ளிட்ட காலங்களிலும் ஜாதக ரீதியாக 19 ஆண்டுகள் சனி திசை.

அதில், சனி புக்தி நான்கு ஆண்டுகள் நடைபெறுகின்ற பக்தர்கள், இவ்வாறு பல வேண்டுதல்கள் நிமித்தமாகவும், ஜாதகர்கள் நளதீர்த்தம் சென்று, ஆத்ம பிரதக்ஷணம் வலமாகச் சுற்றி வணங்கி, குளத்தின் நடுவே இருக்கும் நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். தொடர்ந்து, பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே, இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். எள் தீபம் ஏற்றுவது தொடங்கி, அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி நற்பலன்களை பெற்று வாழலாம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலுக்கு வாரத்தின் பிற நாட்களை காட்டிலும் சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு என்று தனியாக இணையதளம் உள்ளது. அதில் சிறப்பு பூஜை, தரிசனம் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்தநிலையில், திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் ஆலயத்தின் பெயரில் பல ஆண்டுகளாக போலி வெப்சைட் மூலம் பக்தர்களிடம் பண மோசடி செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருநள்ளாறு கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல் போலியாக இணையதளம் தொடங்கி அதில் ஆங்கிலத்தில் தரிசனம், பூஜை விபரங்கள், அதுதொடர்பான போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகாரப்பூர்வ இணையதளம் என கூறி தரிசனம் அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை நம்பி, வெளிநாடு, வெளிமாநிலம் என பல்லாயிரக்கணகானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி மோசடிக்குள்ளாகியுள்ளனர். போலி வெப்சைட் தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இந்த மோசடியில் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த அதிகாரிகள் முதல் முக்கிய நபர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

Readmore: எடப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா!. பூங்கா, விமான நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு உற்சாகம்!