சங்ககிரி அருகே போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய ஏடிசி டிப்போ பஸ் ஸ்டாப் அருகே நேற்றிரவு (டிசம்பர் 14) 10.15 மணிக்கு மூர்த்தி என்பவரை மர்ம நபர்கள் துரத்தி வந்து சின்னாக்கவுண்டனூர் சாலையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதில், மூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில், இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் உடணே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்ட மூர்த்தியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து கொலை செய்த குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கொலைக்கான காரணம் என்ன..?

சங்ககிரி வாணியர் காலணியைச் சேர்ந்தவர் யமஹா மூர்த்தி (எ) மூர்த்தி (45). இவருக்கும், வேலம்மாவலசை சேர்ந்த கனகராஜுக்கும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த அக்.13ஆம் தேதி மூர்த்தி, தனது நண்பரான அசோக்குமார் (29) என்பவரிடம் சென்று கனகராஜ் தனது குடும்பம் குறித்து ஊருக்குள் தவறாக பேசி வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, கனகராஜுக்கு போன் செய்து அசோக்குமார் பேசியுள்ளார்.

மேலும், “உன்னிடம் பேச வேண்டும் உடனே சின்னாக்கவுண்டனூர் ஐயப்பன் கோயில் அருகே உள்ள பகுதிக்கு வா” என அழைத்துள்ளார். இதையடுத்து, கனகராஜும் அவரது நண்பர் சரவணனும் அங்கு சென்றபோது மூர்த்தியும், அசோக்குமாரும் கனகராஜைக் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சரவணனின் கழுத்தை அசோக்குமார் வெட்ட முயன்ற போது, அவர் கையால் தடுத்ததால், மோதிர விரலில் வெட்டுப்பட்டு விரல் துண்டானது. இதையடுத்து, மூர்த்தி, அசோக்குமார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியோடிவிட்டனர்.

ஆபத்தான நிலையிலிருந்த சரவணனை, கனகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மூர்த்தியை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து தான், நேற்றிரவு மூர்த்தியை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். ஏற்கனவே கனகராஜுக்கும், மூர்த்திக்கும் முன் பகை இருந்து வந்த நிலையில், மூர்த்தியை கொலை செய்தது கனகராஜாக இருக்கலாம் என்று சந்தேகித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : தென்னிந்தியர்களின் உணவு முறை..!! அரிசி சாதம் சாப்பிட்டும் உடல் எடை கூடாமல் இருப்பது எப்படி..? இதுதான் காரணம்..!!