அடுக்குமாடி குடியிருப்பின் கேட் விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூர் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தவகையில், இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் சம்பத், சூப்பர் மார்கெட் நடத்திவரும் இவரது மகள் ஐஸ்வர்யா. இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தநிலையில், வழக்கம்போல், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்த ஐஸ்வர்யா, வீட்டிற்குள் செல்வதற்காக கேட்டை திறந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த இரும்பு கேட் சரிந்து கீழே விழுந்தது. அப்போது, கேட்டின் அடியில் சிறுமி சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த சாலையில் சென்றவர்கள் பதறியடித்துக்கொண்டு சென்று, கேட்டை தூக்கி சிறுமியை மீட்டனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர், இருப்பினும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சரிந்து விழுந்து கேட்டில் சிக்கி சிறுமி துடிதுடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.