தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் கடலூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெரியார் குறித்த கேள்விக்கு பெரியார் தமிழ் ஒரு சனியன் என தெரிவித்ததாகவும், பெரியாருக்கும் சீர்திருத்திருக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா மேலும் உடல் இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாகவும் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி தமிழ் தாய் மூன்று ஆயிரம் ஆண்டுகளாக என்ன படிக்க வைத்தது தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? என பேசியிருந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சீமானின் இந்த பேட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பெரியார் கூறியதாக ஆதாரமற்ற பொய் செய்திகளை சீமான் பரப்பி வருவதாக கூறி, இதற்கு அவரிடம் ஆதாரம் கேட்கப் போவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஜன.9) காலை சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சுமார் 10 போலீசார் அங்கு காலை முதலே பாதுகாப்பில் அமர்த்தபட்டனர். இந்த நிலையில், இருபதுக்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சீமானுக்கு எதிராக கோஷமிட்டபடியே சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடியே வீட்டை முற்றுகையிட சென்றதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.