தமிழ்நாட்டில் 1 – 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்துவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், தற்போது 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நடுநிலைப் பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் வெயில் கொளுத்து வருகிறது.
இதனால், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “வெயில் அதிகமாக உள்ள காரணத்தால், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் செய்தியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து எழும் கோரிக்கைகள் தான் இது. இருப்பினும், ஒவ்வொரு கல்வியாண்டும் முடிந்து அடுத்த கல்வி ஆண்டைத் தொடங்க பல சவால்கள் உள்ளன. எனவே, அதன் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.