சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் முதியவரை வீடு புகுந்து தாக்கிய சம்பவத்தையடுத்து, ஒரு மாய பிம்பத்தை மு.க.ஸ்டாலினின் திமுக அரசு கட்டமைப்பதன் கொடிய விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகே பெருமாம்பட்டி பூசநாயக்கனூர் மேல்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய்.இவர் தந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் சாலையில் மது குடித்துவிட்டு பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக தகறாறு ஏற்பட்ட நிலையில், விஜய்யின் வீட்டிற்குப் பதிலாக சதீஷ் என்பவர் வீட்டுக்குச் சென்று கதவைச் சேதப்படுத்தியுள்ளனர். மேற்கூரையில் உள்ள ஓடுகளையும் பிரித்து உள்ளே இறங்கி சதீஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக ஐந்து பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி அருகேயுள்ள பூசநாயக்கனூர் மேல்காடு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள்அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டவர்களின் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கமும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் தான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும், அப்படி எதுவுமே இல்லாதாற்போல் ஒரு மாய பிம்பத்தை மு.க.ஸ்டாலினின் திமுக அரசு கட்டமைப்பதன் கொடிய விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்ற அவர், “போதைக்கும்பலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபட்டட அனைவரையும் கைது செய்வதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “இனியாவது, போதைப்பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும், இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் உணர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.