கணவரை இழந்து தனியாக வசித்தும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அன்னை சத்தியா நகர், வீட்டுவசதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மல்லிகா. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இவரின் வீட்டுக்குள் புகுந்த 2 இளைஞர்கள், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓட முயன்றனர். அப்போது சத்தம் போட்டதால், மல்லிகா மீது கொதிக்கும் தண்ணீரை வீசியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 2 இளைஞர்களை பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு இளைஞர்களுக்கும், மல்லிகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஐஸ்வர்யா, மணிமேகலை ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது, மல்லிகா கழுத்தில் எப்போதும் நகைகள் போட்டு, கையில் பணம் என செழிப்புடன் இருந்து வந்ததாகவும், இதனால் அவரிடம் கொள்ளை முயற்சிக்கு ஐஸ்வர்யா, மணிமேகலை திட்டமிட்டதும் தெரியவந்தது. இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கமான தூத்துக்குடி விளாத்திகுளத்தை சேர்ந்த அப்துல், சாந்த குமார் ஆகியோரை பள்ளிபாளையம் வரவழைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளனர். இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14 சவரன் நகை, ரூ.37 ஆயிரம் பறிமுதல் செய்து மல்லிகாவிடம் ஒப்படைத்தனர்.