திருச்செந்தூர் அருகே இரண்டரை வயது குழந்தையை பெற்ற தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தை சேர்ந்த பெரியசாமி. இவருடைய மனைவி பார்வதி. அவர் முதுகலை பட்டம் பெற்றவர். இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற இரண்டரை வயது மகள் இருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, பார்வதி மற்றும் குழந்தை இருவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் திடீரென பார்வதி கதறி அழுது சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அப்போது, குழந்தை ஆதிரா கீழே விழுந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளது.

இதையடுத்து, அதிர்ச்சி அடைந்தவர்கள் குழந்தையை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பார்வதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து குழந்தையின் முகத்தில் ஒரு துணியை வைத்து மூடிக்கொண்டு என் தாலியை கேட்டு மிரட்டினான். இதனால், பயத்தில் தாலியை கழற்றி கொடுத்துவிட்டேன். பின்னர், குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு குழந்தையையும், தாலியையும் கீழே வீசிவிட்டு தப்பியோடிவிட்டான்” என்று கூறியுள்ளார்.

ஆனால், குழந்தை கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் கூறியதால், போலீசாருக்கு பார்வதி மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. அதாவது, “பார்வதி கடந்த ஒரு வருடமாகவே மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனது கணவர் படிக்காதவர் என்பதால், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்துள்ளது. கணவர் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்பதால், தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த பார்வதி, தன் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தை துடிக்க தொடங்கியதும் தனது முயற்சியை கைவிட்டார். ஆனால், அதற்குள் குழந்தை இறந்துவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பார்வதியை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more “பல மாதங்களாக உழைச்சது இப்படி வீணா போச்சே”..!! தொடர் கனமழையால் 30 ஏக்கர் பருத்தி நீரில் மூழ்கி நாசம்..!!