வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை கட்சிக்காரர்களே சுருட்டிக்கொண்டதால், 2021ம் ஆண்டு தேர்தலில் தோற்றுவிட்டேன் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் வெளிப்படையாக பேசியது நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன். இவர், சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதி நின்று 2 முறை வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இருப்பினும், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் குப்பன் போட்டியிட்டார். ஆனால் அதில் திமுகவை சேர்ந்த கே.பி.சங்கர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்தநிலையில், திருவொற்றியூரில் அதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன், “2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தை, கட்சியினரே சுருட்டியதால் நான் தோற்றுப் போனேன். இந்த முறை அப்படி நடக்காது ராஜா, கனவு காணாதே.. பணம் கொடுக்க மாட்டேன்” என பேசியுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. குப்பனின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகளிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.