சேலம் கொளத்தூர் வனப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் தின்னப்பட்டி ஊராட்சி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி, நாய் உள்ளிட்டவைகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. மேலும் சிறுத்தையை பிடிக்க கூடுதலாக வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு கருங்கரடு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினரும் பார்த்ததாக கூறினர்.
இந்தநிலையில், சிறுத்தையை பிடிக்க கோரி, கிராம மக்கள் கொளத்தூர் வனத்துறை சோதனை சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் ஐந்து கூண்டுகள் மற்றும் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று(செப்.,27) காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட வன அலுவலர் காசிப் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் உள்ளிட்டோர் சிறுத்தையின் உடலை மீட்டு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினு, சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருக்கலாம் என்றும் மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது.