கோனேரிப்பட்டி நீர் மின்தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காவிரி தற்போது பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை நீர் மின்தேக்க நிலையத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஆண்டுதோறும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் – மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணைகள் ஒவ்வொன்றாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்,

கடந்த 15 நாட்களாக தேவூர் அருகே ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. தற்போது, பராமரிப்பு பணி முடிவடைந்ததால் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதையடுத்து, கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் அனைத்து கதவணை மதகுகளும் திறந்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் நேற்று (ஏப்ரல் 9) முதல் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் ஏப்ரல் 26ஆம் தேதி வரை நடக்கிறது.

இதனால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்த்தேக்க பகுதிகளான கோனேரிப்பட்டி, கோட்டமேடு, சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது. இதனால் குறைவான தண்ணீர் உள்ள பாறை இடுக்குகளில் இருக்கும் மீன்களை சிறுவர்கள் ஆர்வமுடன் பிடித்து வருகின்றனர்.

Read More : மனைவியின் அக்காவுடன் மலர்ந்த கள்ளக்காதல்..!! தடையாக இருந்த கணவரை தீர்த்துக் கட்டிய காதலன்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்..!!