வேலைக்கு போவதாக கூறிவிட்டு சென்ற கணவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை அறியாமல் கைக் குழந்தையுடன் சேலம் பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் பரிதவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தின் வளாகப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து அந்த பெண் பேருந்து எதிலும் ஏறாமல் நின்று கொண்டிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த ரோந்து போலீசார், அவரிடம் விசாரித்தனர்.

அப்போது, சிதம்பரம் பகுதியை சேர்ந்த வனிதா (வயது 20) என்பதும், காதல் கணவரை தேடி சேலம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் தங்கியிருந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி இன்பரசனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவர், இதுவரை வீட்டிற்கு வரவில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்து விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து அவரை தேடி சேலம் வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து வனிதாவை போலீசார் சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வனிதா தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது தான் கள்ளக்குறிச்சியில் இருப்பதாக இன்பரசன் கூறியிருக்கிறார்- இதையடுத்து வனிதா, தன்னுடைய குழந்தையுடன் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Readmore: சேலம் மர குடோனில் பயங்கர தீவிபத்து!. ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!