புகாரளிக்க வந்த ஒரு பெண்ணுடன் போலீஸ் டிஎஸ்பி தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமசந்திரப்பா. இவருக்கு வயது 50 ஆகிறது. டிஎஸ்பியான ராமசந்திரப்பாவை மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணை சந்தித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை ஜன்னல் வழியாக மறைந்திருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இதையடுத்து, டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கிடையே, அந்தப் பெண் யார் என்று விசாரித்தபோது, அவர் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் என்பதும், நிலப்பிரச்சனை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்ததும் தெரியவந்தது.
புகார் அளிக்க வந்த அப்பெண்ணை அலுவலகத்தின் கழிவறைக்கு அருகில் உள்ள ஒருபகுதிக்கு அழைத்து சென்ற ராமச்சந்திரப்பா, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலான நிலையில், டிஎஸ்பி ராமசந்திரப்பாவை கர்நாடக போலீஸ் டிஜிபி அலோக் மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மதுகிரி போலீசார், டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.