தமிழகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியில் நேற்று கடுமையான உறைபனியின் தாக்கம் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சென்றது. அதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி மார்ச் முதல் வாரம் வரை உறைபனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்பனி பொழிவுடன் துவங்கும். பின்னர் உறைபனிப்பொழிவு காணப்படும். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைபனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் காணப்படும்.
இந்தநிலையில், கடும் குளிருக்கு இதமாக வீட்டில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும் குளிர் காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருக்கும் அடுப்பில் நெருப்பு மூட்டியுள்ளார். அப்போது வீட்டில் அவருடைய மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4) மற்றும் உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் காலை வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது அனைவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எமரால்டு காவல்துறையினர் மயக்கத்தில் இருந்தவர்களை மீட்டு உதகை தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், மயக்கத்தில் இருந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.