கொங்கணாபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த குறுக்குப்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் அபிமன்யு (வயது 40). இவர், சொந்தமாக டாரஸ் லாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில், ரவி என்பவர் டிரைவராகவும், கோவிந்தன் என்பவர் கிளீனராகவும் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து, கேரளா திருச்சூருக்கு கண்ணாடி பாரம் ஏற்றி வந்த அபிமன்யுவின் லாரியை, வழக்கம்போல டிரைவர் ரவி ஓட்டி வந்துள்ளார்.
அந்த லாரி எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வெட்டுக்காடு பகுதியில் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக டிரைவர் ரவி, லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது, கிளீனர் கோவிந்தன் லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், லாரியில் ஏறி வண்டியை ஓட்டிச் சென்றுள்ளனர். சற்று தூரம் சென்றதும் கண் விழித்து பார்த்த கோவிந்தன், கத்தி கூச்சலிட்ட நிலையில் அவரை மிரட்டி லாரியில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.
பின்னர், லாரியை அவர்கள் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதையறிந்த லாரி உரிமையாளர் அபிமன்யு, உடனே கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரியை கடத்திச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்திய நிலையில், சோளம்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் (50), அழகு முருகன் (37), தோப்பூர் தனபால் (33), சித்தனூர் கோபிநாத் (44) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.