சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சேர்ந்த வீரப்பன் சங்ககிரி அரசு பணிமனை டிப்போவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பவானியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சங்ககிரி ஊஞ்சக்கொரை பேருந்து நிறத்தம் அருகே லாரி ஒன்று பவானி செல்லும் சாலையில் இருந்து ஈரோடு செல்லும் சாலையை நோக்கி சென்றுள்ளது. சங்ககிரி பக்கம் இருந்து பவானி நோக்கி சென்ற கிரேன் லாரி சாலையை கடக்கும் லாரி மீது மோதாமல் இருக்க எதிரே இருந்த சாலையில் புகுந்தது. அப்பொழுது கிரேன் லாரி பேருந்தின் பின்பகுதியில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் பின்பகுதி சேதம் அடைந்தது.

இதில் பேருந்தின் பயணிகளான குமாரபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார், படைவீடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், சிமெண்ட் பேக்டரி பகுதியைச் சேர்ந்த அமுதா, சங்ககிரி வி.என்.பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தான உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் கிரேன் லாரி டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.