சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார் – ஆனந்தி தம்பதி. செந்தில் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி ஆனந்தி தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அகிலா (20), புனிதா (19) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அகிலா திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா, எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் புனிதாவுக்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அதிலும், புனிதாவுக்கு அரசு ஒதுக்கீட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில், மனமுடைந்து போன புனிதா நேற்று யாரும் இல்லாதபோது, தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை புனிதா, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். நீட் சூழ்ச்சியால் தங்களுடைய அன்பு மகளை இழந்து தவிக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நீட் அநீதியால் எத்தனை உயிர்கள் போனாலும், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒருமித்த குரலில் நீட் வேண்டாம் என்று சொன்னாலும், அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம். 7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : BREAKING | தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!