சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 200 ஆண்டுகள் பழமையான கண்ணனூர் மாரியம்மன் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-க்கு அடுத்து வரும் திங்கட்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தாரமங்கலம், அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், கண்ணனூர் மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும் தீர்த்தக்குட ஊர்வலம் நடக்கிறது. 2-ம் நாளான நாளை முத்துக்குமாரசுவாமி படை கோலமும், தாரமங்கலம் நகர நண்பர்கள் குழு சார்பில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 6 மணி முதல் அக்னி பிரவேசம் எனும் தீமிதி திருவிழாவும், மாலையில் பூந்தேரில் அம்மன் வீதி உலாவும்நடைபெறும். மேலும், அலகு குத்துதல், ஆகாய விமானம் அலகு குத்துதல் ஆகியவை ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ம் நாள் (வியாழக்கிழமை) பூந்தேர் ஊர்வலமும், 5-வது நாள் (வெள்ளிக்கிழமை)வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் திருமஞ்சள் நீராட்டு வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.