சேலம் அருகே மாணவர்களை கால் அழுத்த செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசுப் பள்ளி, கிழக்கு ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜெய பிரகாஷ்.
இவர், அடிக்கடி மது அருந்துவிட்டு பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இவர் கால் வலிப்பதால் பள்ளி மாணவர்களை கால் அழுத்திவிட கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ஆசிரியர் ஜெய பிரகாஷூக்கு மாணவர்கள் கால் அழுத்திவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆசிரியர் ஜெய பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.